செஞ்சி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15½ லட்சம் கையாடல் செய்த 2 பேர் கைது
செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15½ லட்சம் கையாடல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணம் கையாடல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களாக விழுப்புரம் அருகே பிடாரிப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் புஷ்பராஜ் (வயது 30), செஞ்சி பேட்டையை சேர்ந்த சேகர் மகன் சுரேஷ் (26), வேம்பி அருகே பாலகிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் குப்புசாமி, செஞ்சி நடுநெல்லிமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் மணி ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் 4 பேருக்கும் அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் தவணை தொகையை வசூல் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் 4 பேரும் 11.3.2020 முதல் 17.8.2022 வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த ரூ.15 லட்சத்து 58 ஆயிரத்து 170-ஐ தனியார் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் ராகேஷ், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் புஷ்பராஜ், சுரேஷ், குப்புசாமி, மணி ஆகிய 4 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ராஜலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜ், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.