வரையாடுகளை துன்புறுத்திய 2 பேர் கைது
பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை துன்புறுத்திய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ‘தினத்தந்தி’யில் வெளியான செய்தியின் புகைப்படத்தால் துப்பு துலங்கியது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை துன்புறுத்திய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 'தினத்தந்தி'யில் வெளியான செய்தியின் புகைப்படத்தால் துப்பு துலங்கியது.
'தினத்தந்தி' செய்தி
பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றி திரிந்த வரையாடுகளின் கொம்புகளை பிடித்து சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்தனர். இதுகுறித்து படத்துடன் 'தினத்தந்தி'யில் கடந்த 10-ந்தேதி வெளியானது. மேலும் இந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் பார்கவதேஜா மேற்பார்வையில் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் அந்த புகைப்படம் எடுத்த தேதியில் ஆழியாறு சோதனைச்சாவடி வழியாக சென்று வாகனங்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்தவர்கள் வரையாடுகளின் கொம்புகளை பிடித்து தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கார் பதிவு எண்ணை கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
இதை தொடர்ந்து வனத்துறையினர் கேரளாவுக்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த வெள்ளூரை சேர்ந்த செல்டன் (வயது 49), வக்காசிட்டியை சேர்ந்த ஜோபி ஆபிரகாம் (40) என்பது தெரியவந்தது. மேலும் பிடிப்பட்ட 2 பேரும் தான் புகைப்படத்தில் இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை தொந்தரவு செய்ததற்காக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் வரையாடுகளை துன்புறுத்தினாலோ, அதன் வாழ்விடத்தை தொந்தரவு செய்தால் வனத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தினத்தந்தி நாளிதழில் வெளியான வரையாட்டின் கொம்பை சுற்றுலா பயணிகள் பிடித்து இருந்த புகைப்படத்தை வைத்து வனத்துறையினர் துப்பு துலக்கி 2 பேரை கைது செய்தது குறிப்பிடதக்கது.