நர்சிங் மாணவி-சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 2 பேர் கைது
நர்சிங் மாணவி-சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
பலாத்காரம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள சவுர்வெளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் குமரேசன் (வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 18 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே கூறினால், அவரது தாய், தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் டாக்டர்களிடம் காண்பித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் பற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து குமரேசனை போக்ேசா சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி(60). விவசாயக் கூலி தொழிலாளி. இவர், ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமிக்கு உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது, அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியிடம், அவரது பெற்றோர்கள் கேட்டபோது, அவரை காந்தி பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி காந்தி மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.