ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:16:45+05:30)

ஓட்டப்பிடாரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் ஓட்டப்பிடாரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்பு வாகனச் சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் புதியம்புத்தூர் கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 55), புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்த முருகன் (28) ஆகியோர் 2 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

பறிமுதல்

விசாரணையில் இவர்கள் 2 பேரும் புதுப்பச்சேரி, ஜம்புலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை மகாராஜன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் கொண்டு சென்று, ஓட்டப்பிடாரம், ஓசனூத்து ரோட்டிலுள்ள பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்தும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின்பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 110 மூட்டைகள், இருசக்கர வாகனத்தில் இருந்த 2 மூட்டைகள் என மொத்தம் சுமார் 5 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி வேன் உரிமையாளரான மகாராஜனை தேடி வருகின்றனர்.


Next Story