இலங்கையில் படகை திருடி ஊடுருவிய 2 பேர் கைது


தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் படகை திருடி இந்திய கடல் எல்லையில் ஊடுருவி மண்டபம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரும் சிக்கினார்..

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கை படகு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முனைக்காடு கடற்கரையில் நேற்று முன்தினம் இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு நின்றது. அந்த படகில் வந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

அந்த படகு யாருக்கு சொந்தமானது? படகில் வந்தது யார்? என்பது குறித்து கடலோர போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் தப்பி ஓடிய 2 பேரும், மண்டபம் கடலோர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையின் மன்னார் மாவட்டம் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த ரோஷன் (வயது 28), நாகேந்திரன்(50) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மன்னார் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் படகை திருடிவிட்டு, இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி மண்டபம் வந்துள்ளனர்.

3 பேர் கைது

படகை முனைக்காடு கடற்கரையில் நிறுத்திவிட்டு மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த முகாமில் வசித்து வரும் இலங்கை அகதி ரோகின்சன்(26) என்பவர், இருவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கையில் படகை கடத்தி தமிழகத்திற்கு வந்த 2 பேர் மீது இலங்கையில் ஏதேனும் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்பது குறித்தும் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story