நகை மெருகூட்டும் கடையில் தங்க நகை-வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது
நகை மெருகூட்டும் கடையில் தங்க நகை-வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது
கும்பகோணத்தில் நகை மெருகூட்டும் கடையில் தங்க நகை-வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தங்க நகைகள்-வெள்ளி பொருட்கள் திருட்டு
கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். கும்பகோணம் பெரியக்கடைத்தெரு முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு மெருகூட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4-ந்தேதி இரவு வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு கரிகாலன், ராஜா ஆகியோர் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் 5-ந்தேதி காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் வாடிக்ைகயாளர்கள் பாலிஷ் செய்வதற்காக கொடுத்திருந்த 30 கிராம் தங்க நகைகள் மற்றும் 20 வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் கரிகாலன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
வலைவீச்சு
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவின்படி, கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து கும்பகோணம், காரைக்கால், திருச்சி ஆகிய பகுதிகளில் மர்மநபர்களை வலைவீசி தேடினர்.
மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் திருச்சி மாநகரம் குட்செட் ரோடு பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் மகன் ஜான் போஸ் (வயது 37), திருச்சி அடைக்கல மாதா தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் முருகவேல் ஆகியோர் என்பதும், நகை, வெள்ளி பொருட்கள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 55 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.