சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருடிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 23 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருடிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 23 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
30 பவுன் நகை கொள்ளை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரில் குடியிருந்து வருபவர் கோமதி நாயக கண்ணன். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாலியன் பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவராத்திரியன்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார், மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 30 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஸ்ரீவல்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக கமுதியை சேர்ந்த சைவத்துைற (வயது 54), ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் பாபு (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த 23 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ. 2 லட்சத்து 58 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.