தனியார் கல்லூரி பஸ்சை திருடிய 2 பேர் கைது


தனியார் கல்லூரி பஸ்சை திருடிய 2 பேர் கைது
x

சிதம்பரத்தில் தனியார் கல்லூரி பஸ்சை திருடிய 2 பேர் கைது

கடலூர்

சிதம்பரம்

புதுச்சேரி வில்லியனூர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 40). இவர் தனக்கு சொந்தமான 2 பஸ்களை புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வந்தார். இதில் ஒரு பஸ்சின் டிரைவராக சிதம்பரம் தில்லை காளியம்மன் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவா் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் பஸ்சை நிறுத்தி விட்டு பாஸ்கர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது பஸ்சை காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பஸ் உரிமையாளர் பாண்டியனிடம் செல்போனில் தெரிவித்தார். உடனே அவர் புதுச்சேரியில் இருந்து காரில் புறப்பட்டு சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் அருகில் காணாமல் போன தனது பஸ் நிற்பதை பார்த்த பாண்டியன், உடனடியாக புதுநகர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சென்று அந்த பஸ்சை சோதனை செய்த போது அதில் 2 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் நடுவீரப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்த ராமதிலகன் மகன் அஜித்குமார்(24), கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த பெரியசாமி(52) என்பதும், இருவரும் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த பஸ்சை மது போதையில் திருடி வந்ததும் தெரிய வந்தது.

இ்தையடுத்து 2 பேரையும், அந்த பஸ்சையும் சிதம்பரம் நகர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இது குறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், பெரியசாமி ஆகியோரை கைது செய்தனர்.


Next Story