கோவை பீளமேட்டில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வைர நகையை திருடிய 2 பேர் கைது
கோவை பீளமேட்டில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வைர நகையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேட்டில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வைர நகையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வைர நகை திருட்டு
கோவை நேருநகரை சேர்ந்தவர் சங்கர் ஆனந்த் (வயது 42), தொழிலதிபர். இவருடைய மனைவி ஹேமலதா (39). இவர் தனது 2 மகன்களுடன் பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது ஓட்டலை விட்டு வெளியே வந்தபோது ஹேமலதா கையில் அணிந்து இருந்த ரூ.5 லட்சம் வைர நகையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அந்த ஓட்டலில் இருந்து வேகமாக வெளியேறி இருசக்கர வாகனத்தில் ஏறி செல்வது தெரியவந்தது. ஆனால் அவர்களின் முகம் சரியாக தெரியவில்லை.
2 பேர் கைது
இதையடுத்து அவினாசி ரோட்டில் உள்ள சிக்னல்களில் இருக்கும் கண்காட்சி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் 2 பேரின் முகம் தெரிந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் கோவையை சேர்ந்த சுதாகர் (38), ஆஞ்சநேய பிரபு (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வைர நகை பறிமுதல் செய்யப்பட்டது.