கொலைமிரட்டல் வழக்கில் 2 பேர் கைது
கோர்ட்டில் ஆஜராகாததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோர்ட்டில் ஆஜராகாததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதை பொருள் கடத்தல் ஆசாமி
கோவை ஆத்துப்பாலத்தை சேர்ந்தவர் ரியாசுதீன் (வயது25). இவர் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் குனியமுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் வந்த இவர், மதுரை தல்லாகுளம் போலீசில் வழக்கு ஒன்றில் நிபந்தனை கையெழுத்து போட வேண்டியிருந்தது. ஆனால் இவர் கையெழுத்து போடாமல் தலைமறைவானார். எனவே அவருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நிபந்தனை ஜாமீன் ரத்து
இதேபோல் கொலை மிரட்டல், கொலை முயற்சி வழக்கில் தொடர் புடைய தீத்திபாளையம் அருண் நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் (24) என்பவர் கைதானார். அவர், சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இவர் வேறு எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையை மீறி ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்தது. மேலும் அவர் ஆயுதம் பயன்படுத்தியதும் தெரியவந்ததால், போலீசார் அவரின் ஜாமீனை ரத்து செய்தனர். இவர் கைது செய்யப்பட்டார்.
கொலை மிரட்டல் வழக்கு
கோவை ராமநாதபுரம் அருணாச்சல தேவர் காலனியை சேர்ந்தவர் பிரசன்னா (22). இவர் கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இவர் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போடாமல் இருந்த நிலையில் இவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அவரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர். கைதான பிரசன்னா சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.