விவசாயி கொலை வழக்கில் 2 பேர் கைது


விவசாயி கொலை வழக்கில் 2 பேர் கைது
x

குன்னம் அருகே விவசாயி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

விவசாயி கொலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 47), விவசாயி. இவர் சென்னையில் இருந்து அரியலூருக்கு ரெயிலில் வந்த தனது மகளை அழைத்து செல்வதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ராமலிங்கபுரம் காட்டுப்பகுதியில் சென்றபோது அவரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் இரும்பு ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனுக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும் அதன் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சிவசாமி (60), நடராஜன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகள் 7 பேர் சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டால் தான் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story