ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
குமரியில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கணியாகுளம் ஜெ.கே. கார்டன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது46), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மீது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உள்பட சுசீந்திரம், ராஜாக்கமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஜெயக்குமார் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சுசீந்திரம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்கள். இதுபோல் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த சச்சின் என்ற முகேஷ் (வயது 26) என்பவர் மீதும் கோட்டார் போலீஸ் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கு உள்ளன. அவரையும் நேற்று கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.