சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகள் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
தஞ்சை மாவட்ட கடல் பகுதியில், 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்குள் மீன் பிடிக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த விதியை மீறி, வெளி மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் வந்து மீன்பிடிப்பதாகவும், இந்த படகுகளால், நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதமடைவதாகவும் நாட்டுப்படகு மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன்வளத்துறை ஆய்வாளர் துரைராஜ், சார் ஆய்வாளர் ஆனந்த், காவல் சார் ஆய்வாளர்கள் நவநீதன், சுப்பிரமணியன், சிறப்பு காவல் உதவியாளர் போஸ் நடனம், முதல்நிலை காவலர் ராஜா, மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
2 படகுகள் பறிமுதல்
அப்போது முத்துப்பேட்டை வாய்க்காலுக்கும், செல்லக்கண்ணி ஆற்று வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் 3½ நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்குள் 2 விசைப்படகுகள் விதிகளை மீன்பிடித்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவை மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.