2 குழந்தைகள் - மனைவி கிணற்றில் தள்ளி கொலை
அலங்காநல்லூர் அருகே 2 குழந்தைகள், மனைவியை கிணற்றில் தள்ளி விவசாயி கொன்றார். பின்னர் அவர், கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அலங்காநல்லூர் அருகே 2 குழந்தைகள், மனைவியை கிணற்றில் தள்ளி விவசாயி கொன்றார். பின்னர் அவர், கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தோப்பு வீட்டில் வசித்தனர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி சுரேகா (35). இவர்களுடைய மகள் யோகிதா (16), மகன் மோகனன் (13).
இதில், யோகிதா மதுரையில் உள்ள மகளிர் பள்ளியில் 11-ம் வகுப்பும், மோகனன் பாலமேட்டில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
ஊமச்சிகுளம் அருகே உள்ள தவசிபுதூரில் கொய்யா தோப்பை முருகன் குத்தகைக்கு எடுத்திருந்தார். இதனால் அந்த தோப்பில் உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கிணற்றில் தள்ளி கொலை
நேற்று முன்தினம் நள்ளிரவில் தன்னுடைய மனைவி, மகள்-மகனை தோட்டத்தில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு நைசாக பேசி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென மகள் யோகிதாவையும், மகன் மோகனனையும் முருகன் கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இதைப்பார்த்ததும் சுரேகா அலறினார்.
தண்ணீரில் இரு பிள்ளைகளும் தத்தளிப்பதை கண்டு அவர்களை காப்பாற்ற முயன்றார். அந்த நேரத்தில் மனைவியை தாக்கி, அவரது, கைகளை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் 3 பேரும் கிணற்றில் மூழ்கி ஒருவர்பின் ஒருவராக உயிரிழந்தனர்.
கழுத்தை அறுத்துக்கொண்டார்
உடனே, முருகன் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவர் கழுத்தை அறுத்துக்கொள்வதற்கு முன்பாக உறவினர் ஒருவரிடம் கடைசியாக போனில் பேசி, "கிணற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம்" என கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார். எனவே எதிர் முனையில் பேசிய நபர் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அப்போது, கிணற்றின் அருகே முருகன், கழுத்தில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உடல்கள் மீட்பு
இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிணற்றில் தேடி, சுரேகா மற்றும் அவருடைய மகள்-மகன் ஆகிய 3 பேர் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்பு 3 பேரின் உடல்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரணம் என்ன?
இந்த வெறிச்செயலில் முருகன் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:-
குடும்பத்தினரை கொன்று முருகன் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதால் கடன் தொல்லை காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவரது வங்கி கணக்கில் பணம் இருப்பு உள்ளது. எனவே கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. எனவே அடுத்தக்கட்ட விசாரணை நடத்தி வருகிறோம்.
கொலை வழக்கு
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன், தனது மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு அதன்பின்னரே அவரை கிணற்றில் தூக்கி போட்டுள்ளார். இதுபோல், குழந்தைகளையும் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். எனவே அவர் மீது கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள முருகனிடம் மயக்கம் தெளிந்தபின்பு விசாரணை நடத்த உள்ளோம். அதன்பின்னரே கடன் தொல்லையால்தான் இந்த சம்பவம் நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதுபற்றி முழுமையாக தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.