முன்விரோத தகராறில் தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது


முன்விரோத தகராறில் தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
x

கரூரில் முன்விரோத தகராறில் தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

முன்விரோத தகராறு

கரூர் தாந்தோணிமலையை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 33). கூலி தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் யோகராஜ் தாந்தோணிமலை டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்தார்.கரூர் சுங்ககேட்டை சேர்ந்தவர் முகமது அன்சாரி (19). இவர் கோவையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். யோகராஜ், முகமது அன்சாரி இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது.

பீர்பாட்டிலால் தாக்குதல்

இதையடுத்து முகமது அன்சாரியின் நண்பர்களாக சஞ்சய் (19), தினேஷ், அஜித் ஆகிய 3 பேரும் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். இதில் சஞ்சய் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் டாஸ்மாக் கடையில் வைத்து முகமது அன்சாரிக்கும், யோகராஜிக்கும் இடையே மீண்டும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமது அன்சாரி, சஞ்சய், தினேஷ், அஜித் ஆகிய 4 பேரும் சேர்ந்து யோகராஜை பீர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் சேரால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த யோகராஜ் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

2 பேர் கைது

இதுகுறித்து யோகராஜ் மனைவி மீனா கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து, முகமது அன்சாரி, சஞ்சய் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.மேலும் தலைமறைவாக உள்ள தினேஷ், அஜித் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story