மின்கம்பத்தில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
மதுக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
மதுக்கரை
மதுக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் ஆதித்யா (வயது 18). அதுபோன்று அதேப்பகுதியை சேர்ந்தவர் முகேஷ்வரன் (19). இவர்கள் 2 பேரும், கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆதித்யாவும், முகேஷ்வரனும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். பின்னர் 2 பேரும் தங்கியிருந்த அறைக்கு திரும்பினார்கள்.
மின்கம்பத்தில் மோதி பலி
ஆதித்யா மோட்டார் சைக்கிளை ஓட்ட, முகேஷ்வரன் பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் 2 பேரும் எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.