கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x

திண்டுக்கல் அருகே டிப்பர் லாரி - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திண்டுக்கல்

கல்லூரி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய மகன் தருண் சாஸ்தா (வயது 21). எரியோட்டை அடுத்த கெச்சாணிபட்டியை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் சூரஜ் குமார் (21).

தருண் சாஸ்தா, சூரஜ் குமார் ஆகியோர் திண்டுக்கல் அருகே குளத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் அருகருகே உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால், கல்லூரி முடிந்ததும் அவ்வப்போது ஒன்றாக மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று கல்லூரி முடிந்ததும், இவர்கள் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்

தருண் சாஸ்தா மோட்டார் சைக்கிளை ஓட்டினார். சூரஜ் குமார் பின்னால் அமர்ந்திருந்தார். திண்டுக்கல்-குளத்தூர் சாலையில் சூடாமணிப்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் டிப்பர் லாரி ஒன்று சென்றது. மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்த அந்த லாரியை, எந்தவொரு சைகையும் காட்டாமல் திடீரென டிரைவர் பக்கவாட்டு சாலைக்கு திருப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத தருண்சாஸ்தா அதிர்ச்சி அடைந்தார்.

மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றும் அவரால் முடியவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் பரிதாப சாவு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தருண் சாஸ்தா, சூரஜ் குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த 2 பேரும், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கல்லூரி மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story