காரியாபட்டி ஒன்றியத்தில் ரூ.2¾ கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள்


காரியாபட்டி ஒன்றியத்தில் ரூ.2¾ கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:45 PM GMT)

காரியாபட்டி ஒன்றியத்தில் ரூ.2¾ கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி ஒன்றியத்தில் ரூ.2¾ கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

திட்டப்பணிகள்

காரியாபட்டி ஒன்றியம் கம்பிக்குடி ஊராட்சி, வினோபாநகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 ன் கீழ் ரூ.2¾ கோடி மதிப்பில் 63 பணிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் முன்னிலையில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்தநிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2 ன் மூலம் 2021-2022-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 92 கிராம ஊராட்சிகளிலும், 2022-2023-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 94 கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் 100 சதவீதம் விடுதலின்றி தனிநபர், சமுதாயம் முழுமையாக பயனடைவதே இதன் நோக்கமாகும். அதன்படி காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், டி.கடம்பன்குளம் ஊராட்சியில் 12 பணிகள் ரூ.43.95 லட்சம் மதிப்பிலும், கம்பிக்குடி ஊராட்சியில் 10 பணிகள் ரூ.46.725 லட்சம் மதிப்பிலும், கிழவனேரி ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.93 லட்சம் மதிப்பிலும், மாங்குளம் ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.96 லட்சம் மதிப்பிலும், முடுக்கன்குளம் ஊராட்சியில் 9 பணிகள் ரூ.45.119 லட்சம் மதிப்பிலும், சூரனூர் ஊராட்சியில் 10 பணிகள் ரூ.41.445 லட்சம் மதிப்பிலும், வலுக்கலொட்டி ஊராட்சியில் 8 பணிகள் ரூ.34.05 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.2¾ கோடியில் மதிப்பில் கண்மாய், ஊருணி ஆழப்படுத்துதல், சாலை அமைத்தல், கதிரடிக்கும் தளம் அமைத்தல், கழிப்பறை, பூங்கா, நர்சரி உள்ளிட்ட 63 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், காரியாபட்டி யூனியன் தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story