ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.2½ கோடி நிதி உதவி


ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.2½ கோடி நிதி உதவி
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.2½ கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜவுளிப்பூங்கா அமைக்க நிதி

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கு சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி வழங்குகிறது.

ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவில் நிலம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் போன்ற உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுசுவர், கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி, ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் உள்ளிட்ட இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாக கருதப்படும்.

கள்ளக்குறிச்சியில் 26-ந் தேதி ஆலோசனை

இத்திட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்யும் வகையில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் வருகிற 26-ந் தேதி(வியாழக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 0427-2913006 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், ddtextilessal emregional@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தகவல் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story