சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 39 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 674 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை வளையமாக மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.60 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 178 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் சூட்கேசை சோதனை செய்தனர். அதில் கால் மூட்டு வலிக்காக பயன்படுத்த கூடிய துணியில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.81 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 585 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

துபாயில் இருந்து கொழும்பு வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபர் சில பயணிகளிடம் இருந்து சிறிய பார்சல்களை வாங்கிய போது சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவர் துபாயில் இருந்து கொழும்பு வந்ததாகவும், பின்னர் கொழும்பில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் சிறிய பார்சல்களை கொடுத்ததாகவும், அதனை சென்னை வந்ததும் மீண்டும் வாங்கியதாகவும் கூறினார்.

அந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.98 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 39 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 674 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மலேசிய பெண் உள்பட 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story