சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 252 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரும் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 315 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

உள்ளாடை

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த 2 இலங்கை பெண்கள் உள்பட 4 பேரின் உள்ளாடைகள் மற்றும் மூட்டு வலிக்கான பேண்டுகள், கால் சட்டையில் ரகசிய அறைகளில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் 4 பேரிடம் இருந்தும் ரூ.77 லட்சத்து 76 ஆயிரம் 1 கிலோ 413 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னை வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து இருந்த ரூ.28 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 524 கிராம் தங்க கட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

4 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 8 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 252 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 இலங்கை பெண்கள் உள்பட 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story