விமானத்தில் ரூ.2¼ கோடி தங்கம் கடத்தல்
விமானத்தில் ரூ.2¼ கோடி தங்கம் கடத்தல்
கோவை
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ரூ.2¼ கோடி தங்கம் கடத்தி வந்த 2 பெண் பயணிகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பயணிகளிடம் சோதனை
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க அதிகாரிகள் கண்காணித்து வருவதுடன், கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்கின்றனர். இருப்பினும் தங்கம் கடத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் பயணிகள் சிலர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷார் அடைந்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வரும் பயணிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ரூ.2¼ கோடிதங்கம் கடத்தல்
இதில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த 2 பெண் பயணிகள் உள்பட 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதுடன், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் ஜல்லடைப்போட்டு சோதனை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்
அதில் அவர்கள் ஆசனவாய் மற்றும் உள்ளாடையில் 3.73 கிலோ தங்க நகை, நாணயத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.2.19 கோடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 பேர் கைது
விசாரணையில், அவர்கள் திருச்சியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது34), பிரியா (36), கோவையை சேர்ந்த ஸ்ரீமதி (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் கைதுசெய்தனர். தொடர்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 3.73 கிலோ தங்க நகையை பறிமுதல் செய்தனர்.