49 பேருக்கு 2½ கோடி பக்க குற்றப்பத்திரிகை நகல்


49 பேருக்கு 2½ கோடி பக்க குற்றப்பத்திரிகை நகல்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:30 AM IST (Updated: 29 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பைன் பியூச்சர் நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக 49 பேருக்கு 2½ கோடி பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்
கோவை


பைன் பியூச்சர் நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக 49 பேருக்கு 2½ கோடி பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


நிதி நிறுவன முறைகேடு


கோவையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45), விவேக் (34) ஆகியோர் கோவையில் பைன் பியூச்சர் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களை தொடங்கினர். இவர்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டனர். அதை நம்பி கோவை, திருப்பூரை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.


இவ்வாறு முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்தனர். இது குறித்து முதலீட்டா ளர்கள் கொடுத்த புகாரின்பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கோவை உள்பட தமிழகம் முழுவதும் 25,389 பேரிடம் ரூ.189 கோடிக்கும் மேல் பண மோசடி செய்தது தெரியவந்தது.


டிஜிட்டல் வடிவில் ஆவணங்கள்


இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் ஆகியோர் 2013-ம் ஆண்டு கைது செய்யப் பட்டனர். அதைத்தொடர்ந்து விவேக்கின் சகோதரர் நித்யானந்தன் கைது செய்யப்பட்டார். இந்த நிதி மோசடி சம்பந்தமாக மொத்தம் 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டில் (டான் பிட்) நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மொத்தம் 5 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோவை டான்பிட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவற்றின் நகலை வழக்கில் தொடர்புடைய 49 பேருக்கும் வழங்க வேண்டும். ஆனால் 49 பேருக்கும் நகல் எடுத்து வழங்க வேண்டும் என்றால் மொத்தம் 2½ கோடி நகல்கள் எடுக்க வேண்டும். இதற்கு ரூ.2 கோடி வரை செலவு பிடிக்கும் என்று தெரியவந்தது. இதையடுத்து டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


மேல்முறையீடு தள்ளுபடி


ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய 49 பேரும் டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை வாங்க மறுத்து விட்டனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது, அங்கும் போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைய டுத்து 49 பேருக்கும் 3 கோடி நகல்களை வழங்க நிதி ஒதுக்க கோரி பொருளதார குற்றப்பிரிவு போலீசார் அரசிற்கு கடிதம் எழுதினர்.


இதற்கு அரசு விரைவில் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்க உள்ளது. இந்த நிதி கிடைத்ததும் குற்றம்சாட்டப்பட்ட 49 பேருக்கும் மொத்தம் 2½ கோடி பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் எடுத்து வழங்கப்பட உள்ளது.


ஒப்புதல் கிடைக்கும்


இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-


பைன்பியூச்சர் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கார்கள், நிலம், தங்க நகைகள் உள்ளிட்டவை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 சொகுசு கார்கள் மொத்தம் ரூ.24 லட்சத்திற்கு ஏலம் சென்றது.


இந்த நிலையில் இந்த நிதி முறைகேடு வழக்கில் தொடர்புடைய 49 பேருக்கும் தலா 5 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும். அதை அவர்கள் டிஜிட்டல் வடிவில் பெற மறுத்து விட்டனர்.

எனவே நகல் எடுக்க தேவையான நிதி கோரி அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு இன்னும் சில வாரங்களில் ஒப்புதல் கிடைக்கும் என்று கருதுகிறோம். நிதி கிடைத்ததும் குற்றப்பத்திரிகை நகல் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story