ரூ.2½ கோடியில் புதைவழி மின்தடம் அமைக்கும் பணிகள் தீவிரம்

திருவாரூர் ஆழித்தேரோடும் வீதிகளில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பில் புதைவழி மின்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் ஆழித்தேரோடும் வீதிகளில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பில் புதைவழி மின்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத பழமைவாய்ந்த தலமாகவும் விளங்குகிறது. இக்கோவில் ஆழித்தேரோட்டம் என்பது உலக பிரசித்தி பெற்றது. ஆழித்தேரோட்டம் நடைபெறும்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வருகை தருவது வழக்கம். அப்போது தேரோடும் வீதிகளில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால் ஆழித்தேரோட்டம் நடைபெறும்போது மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்படும்.
இந்த மின் தடை காரணமாக திருவாரூருக்கு வருகை தரும் பக்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையை கடக்கும் மின் இணைப்புகள் துண்டித்து, தேர் கடந்த பிறகு மீண்டும் மின் வினியோகத்தை சீரமைப்பது போன்ற பணி சுமையும் மின் ஊழியர்களுக்கு நிலவி வந்தது.
புதைவழி மின்தடம்
தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட புதைவழி மின்தடம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மின்சாரத்துறை அமைச்சர், திருவாரூர் தேரோடும் வீதிகளில் புதைவழி மின்தடம் அமைக்கப்படும் என அறிவித்து, இதற்காக ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து திருவாரூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஆழித்தேரோடும் நான்கு வீதிகள் மற்றும் சாமி ஊர்வலம் வரும் பகுதிகளில் உயர் அழுத்த மின்பாதைகளை புதைவழி மின்தடமாக மாற்றும் பணிக்கான பூமி பூஜை கடந்த 4-ந் தேதி நடந்தது.
விரைவாக முடிக்கப்படும்...
இந்த பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பணிகள் தொடங்கிய நிலையில், உயர் அழுத்த மின் வயர் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக தேரோடும் 4 வீதிகளிலும் பொக்லின் எந்திரங்களை கொண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு கிரேன் உதவியுடன் மின் வயர் கேபிள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு புதைவழி மின் பாதை திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.