ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2½ கோடி மோசடி
கூடுதல் வட்டி தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த கேரளாவை சேர்ந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
கூடுதல் வட்டி தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த கேரளாவை சேர்ந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரியல் எஸ்டேட் அதிபர்
கோவை கணபதியை சேர்ந்தவர் டெனிசன் (வயது 45), ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஜூசர் சைபுதீன் (69) என்பவர் அறிமுகம் ஆனார்.
அவர் டெனிசனிடம் நான் பீளமேட்டில் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் மாதம் 13 சதவீத வட்டி தருவதாகவும் கூறினார்.
அதை நம்பிய டெனிசன், பீளமேடு சென்று ஜூசர் சைபுதீன், அவருடைய மனைவி ஷமீனா (60), மகன்கள் மோதின் (32), ஜூசர் உசைபா (28), மருமகள் கைனப் (27) ஆகியோரிடம் ரூ.2½ கோடியை கொடுத்தார்.
ஒருசில மாதங்கள் மட்டும் அவருக்கு மாதந்தோறும் வட்டி கொடுத்தனர். பின்னர் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
மோசடி
இது தொடர்பாக டெனிசன் பலமுறை நேரிலும், செல்போன் மூலமும் அவர்கள் 5 பேரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வந்தனர்.
இதையடுத்து அவர், அந்த நிறுவனத்துக்கு சென்று பார்த்த போது அது மூடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டெனிசன், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஜூசர் சைபுதீன், ஷமீனா, மோதின், ஜூசர் உசைபா, மருமகள் கைனப் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.
தந்தை- மகன் கைது
இந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த ஜூசர் சைபுதீன், அவருடைய மகன் ஜூசர் உசைபா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஷமீனா, மோதின், கைனப் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அவர்கள் வேறு யாரிடமாவது மோசடி செய்து உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.