ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரசாரம்


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரசாரம்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வீதி வீதியாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி (திங்கட் கிழமை) நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்ததைத்தொடர்ந்து தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது.

காங்கிரஸ்- அ.தி.மு.க.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சார்பிலும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சூறாவளி பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனல்பறக்கும் சூழ்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக 24-ந்தேதியன்று ஈரோடு செல்லும் மு.க.ஸ்டாலின் சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கு கிறார். அங்கு, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். அதன்படி, 24-ந்தேதியன்று மு.க.ஸ்டாலின், பிரசாரம் செய்ய உள்ள இடங்கள் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

இடங்கள் எவை?

அதன் விவரம் வருமாறு:-

வெட்டுகாட்டு வலசு-19-வது வார்டு, நாச்சாயி டீகடை, சம்பத் நகர், பெரியவலசு, குளம்-காந்திநகர், அக்ரஹாரம் வண்டிபேட்டை, சத்யா நகர், நெறிகல் மேடு, வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம், கே.என்.கே.ரோடு, ராஜாஜிபுரம், மெட்ரோல் ஓட்டல், எல்லை மாரியம்மன் கோவில், முத்துசாமி வீதி, பழனிமலைக் கவுண்டர் வீதி, தெப்பக்குளம் ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அன்றைய தினம் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

25-ந்தேதியன்று, டீச்சர்ஸ் காலனி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங், தங்கபெருமாள் கோவில் வீதி வழியாக கள்ளுக்கடை மேடு, பழைய ரெயில்வே ஸ்டேசன் ரோடு, சமாதானம்மாள் சத்திரம், பேபி மருத்துவமனை வழியாக மரப்பாலம், மண்டப வீதி வழியாக காரைவாய்க்கால், வளையக்கார வீதி, இந்திராநகர், கருங்கல்பாளையம், கோட்டையார் வீதி, ரங்கநாதர் வீதி வழியாக சின்ன மாரியம்மன் கோவில் மைதானம், காந்தி சிலை, மணிக்கூண்டு, சித்திக் திடல், அசோகபுரி, நேதாஜி ரோடு சென்டிரல் தியேட்டர், பன்னீர்செல்வம் பார்க் ஆகிய இடங்களில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, சக்தி சுகர்ஸ் விருந்தினர் இல்லத்துக்கு திரும்புகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

உதயநிதி ஸ்டாலின்

இதேபோல, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 20-ந்தேதியன்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

20-ந்தேதியன்று, அரசு மருத்துவமனை, நல்லசாமி மருத்துவமனை வீதி, சிதம்பரம் செட்டியார் காலனி, சென்டிரல் தியேட்டர், கால்நடை மருத்துவமனை எதிரே, சித்திக் திடல், மண்டப வீதி, செட்டியார் கடை, ஜின்னா வீதி, கிருஷ்ணா தியேட்டர், காந்தி சிலை, பொன்னுசாமி வீதி, கே.ஏ.எஸ்.நகர், வறையகரை வீதி, காரை வாய்க்கால், அண்ணா டெக்ஸ், சமாதானம்மாள் சத்திரம், பழைய ரெயில்வே ஸ்டேசன் ரோடு ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின், ஈ.வி.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்கிறார்.


Next Story