2 நாட்கள் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் 2 நாட்கள் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் 2 நாட்கள் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உப்பு உற்பத்தி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை பெய்தது. இதனால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. தொடர் மழையால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பாதிப்பு
உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு, மழை நீரில் கரைந்து வீணாகி உள்ளது. உப்பு பாத்திகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு வாரம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.