முன்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்


முன்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்
x

முன்பக்கம் டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

ஆந்திராவில் இருந்து கடப்பா கல் லோடு ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி லாரி ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியின் பின்பக்கம் கடப்பா கற்கள் மீது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிவாரெட்டி, வரதராஜீ ஆகியோர் அமர்ந்து பயணம் செய்தனர்.

லாரியை டிரைவர் லட்சுமணய்யா(வயது 36) ஓட்டினார். அவருடன் அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு(50) ஆகியோர் லாரியின் முன்பக்கம் அமர்ந்து வந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் சென்னை தாம்பரம் அடுத்த எருமையூர் செக்போஸ்ட் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென லாரியின் முன்புற வலதுபக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, முடிச்சூர் அருகே சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியின் பின்புறம் அமர்ந்து வந்த சிவாரெட்டி, வரதராஜீ ஆகியோர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரியில் இருந்த கடப்பா கற்கள் விழுந்தது. இதில் கற்களுக்கு இடையே சிக்கிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

லாரி டிரைவர் லட்சுமணய்யா, அவருடைய மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாலையோரம் கவிழ்ந்து கிடந்த லாரியும் மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதுபற்றி சிட்லப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story