விபத்தில் பக்தர்கள் 2 பேர் இறப்பு:வேன் டிரைவர் கைது
விபத்தில் பக்தர்கள் 2 பேர் இறந்த சம்பவத்தில் வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்
சாத்தூர்
சிவகாசி, திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 45), சங்கரன்(49), ஜெயராஜ்(46) உள்பட 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 28-ந்தேதி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றனர். சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் புல்வாய்பட்டி விலக்கு அருகில் இவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கருப்பசாமி, சங்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வந்தனர். நான்கு வழிச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கரூரில் இயங்கி வரும் தனியார் கூரியர் வேன் என்பதும், வேனை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த முகேஸ்வரன்(26) ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கரூர் சென்ற தாலுகா போலீசார், முகேஸ்வரனை கைது செய்து வேனையும் பறிமுதல் செய்தனர்.