சதுரகிரியில் 2 பக்தர்கள் திடீர் சாவு
சதுரகிரிக்கு மலை ஏறிய போது 2 பக்தர்கள் மூச்சு திணறி இறந்தனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரிக்கு மலை ஏறிய போது 2 பக்தர்கள் மூச்சு திணறி இறந்தனர்.
மகாளய அமாவாசை
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மகாளய அமாவாசையையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலை கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜன் (வயது 47) என்பவர் வந்தார். அப்போது அவர் வனத்துர்க்கை கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பின்னர் அவரின் உடல் டோலி மூலம் தாணிப்பறை அடிவார பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த நாகராஜ்(55) தனது குடும்பத்தினருடன் சதுரகிரிக்கு வந்தார். அப்போது அவர் மலைப்பாதை வழியாக கோரக்கர் குகை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் டோலி மூலம் தாணிப்பறை அடிவாரப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தசம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலை ஏறும் போது பக்தர்கள் 2 பேர் இறந்தது பக்தர்களிடைேய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.