சிறுவன் உள்பட 2 பக்தர்கள் பி.ஏ.பி. கால்வாயில் மூழ்கி பலி
சிறுவன் உள்பட 2 பக்தர்கள் பி.ஏ.பி. கால்வாயில் மூழ்கி பலி
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே பழனி பாதயாத்திரை சென்ற போது பி.ஏ.பி. கால்வாயில் இறங்கி குளித்த சிறுவன் உள்பட 2 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
17 வயது சிறுவன்
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே பெரியகுயிலியில் இருந்து பெண்கள் உள்பட 110 பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக கடந்த 1-ந் தேதி புறப்பட்டனர். அவர்கள் சுல்தான்பேட்டையை அடுத்த பச்சாகவுண்டம்பாளையம் நகரகளந்தை பாலத்தின் கீழ் செல்லும் பி.ஏ.பி. கால்வாயில் குளிக்க இறங்கினர். அதில் செந்தில்குமார் என்பவரது மகன் கோபிநாத்(வயது 17), கால்வாயின் படிக்கட்டில் நின்று குளித்து கொண்டு இருந்தார்.
தேடும் பணி
அப்ேபாது திடீரென நிலைதடுமாறி கால்வாயில் தவறி விழுந்தார். இதை கண்ட மகாலிங்கம்(38) என்பவர் கால்வாயில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றார். நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதை கண்ட சக பாதயாத்திரை குழுவினர் சுல்தான்பேட்டை போலீசாருக்கும், சூலூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று கோபிநாத், மகாலிங்கம் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனிக்கு பாதயாத்திரை சென்ற சிறுவன் உள்பட 2 பேர், பி.ஏ.பி. கால்வாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.