டாஸ்மாக் பார் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் டாஸ்மாக் பார் ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுல்தான்பேட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி பகுதியை சேர்ந்தவர்கள் நாகபெருமாள்(வயது 32), கலையரசன்(46). இவர்கள், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலை பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நாகபெருமாள் மற்றும் கலையரசன் ஆகியோர் சம்பவத்தன்று செஞ்சேரிமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் டீ வாங்க சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை நாகபெருமாள் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென நாகபெருமாள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நாகபெருமாள் மற்றும் கலையரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.