2 போலி டாக்டர்கள் கைது

திமிரி அருகே 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்தி வந்த மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டது.
திமிரி அருகே 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்தி வந்த மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டது.
போலி டாக்டர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதிகளில் டாக்டருக்கு படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த பாஷா என்ற மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது பாஷா (வயது 46) என்பவர் டாக்டருக்கு படிக்காமல், ஊசி செலுத்துவது உள்ளிட்ட ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாஷாவை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சீல் வைப்பு
அதேபோன்று திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் செயல்பட்டு வந்த இளங்கோ என்பவருக்கு சொந்தமான மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இளங்கோ (43) என்பவர் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவராக செயல்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இளங்கோவை போலீசார் கைது செய்தனர். மேலும் பாஷாவுக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் இளங்கோவுக்கு சொந்தமான மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.