அனுமதியின்றி இயங்கிய 2 பட்டாசு கடைகளுக்கு 'சீல்'
நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி இயங்கிய 2 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சுண்ணாம்பு குட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேல்மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்த தமிழரசு என்பவருக்கு சொந்தமான 2 கடைகளை பையனபள்ளியை சேர்ந்த சீனிவாசன் (வயது 45) என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார்.
இந்தநிலையில் சீனிவாசன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அனுமதியின்றி இரண்டு பட்டாசு கடைகளை திறந்து இருப்பதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் குமார் தலைமையில், துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் சென்று இரண்டு கடைகளிலும் சோதனை செய்தனர்.
அப்போது உரிய அரசு அனுமதி இல்லாமல் பட்டாசு கடைகளை திறந்து இருப்பதும், கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வருவாய் துறையினர் இரண்டு பட்டாசு கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர்.