ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி: காதலனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்
குடிபோதையில் தகராறு செய்து வந்த கள்ளக்காதலனை மற்றொரு காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதல்
சென்னை விருகம்பாக்கம், சாரதாம்பாள் நகரில் வசித்து வருபவர் சவுந்தர்யா (வயது 29). இவர், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட 132-வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். கணவனை பிரிந்த இவர் தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவர்களுடன் சவுந்தர்யாவின் அக்காள் மகன் ஒருவரும் தங்கி உள்ளார். இந்நிலையில் சவுந்தர்யாவிற்கு நெற்குன்றத்தை சேர்ந்த கூலி தொழிலாளி விஜய் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
குத்திக்கொலை
நேற்று முன்தினம் இரவு சவுந்தர்யாவின் வீட்டில் விஜய், கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் 3 சிறுவர்கள் மட்டும் இருந்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேலைக்கு சென்று திரும்பிய சவுந்தர்யாவிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், மற்றொரு கள்ளக்காதலனான பிரபுவுடன் சேர்ந்து விஜயை கொலை செய்ததாக தெரிவித்தார். பிரபுவுடனான கள்ளக்காதலை முறித்து கொள்ளும்படி கூறியதால், கத்தியால் குத்தி கொன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சவுந்தர்யா மற்றும் பிரபுவை கைது செய்தனர்.