அரசூர் அருகே மினிலாரி மோதி 2 நண்பர்கள் பலி
அரசூர் அருகே பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றபோது மினிலாரி மோதி 2 நண்பர்கள் பலியாகினர்.
திருவெண்ணெய்நல்லூர்,
தச்சு தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 28), தச்சு தொழிலாளியான இவருக்கும் பண்ருட்டி மணிநகரை சேர்ந்த ஹரிணி(வயது 24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நிறைமாத கர்ப்பிணியான ஹரிணிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஹரிணி தனது குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்தார்.
குழந்தையை பார்க்க...
இந்த நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திக்ராஜா தனது நண்பரான அதேஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(23) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது மனைவி, குழந்தையை பார்த்து விட்டு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
பண்ருட்டி-அரசூர் சாலையில் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கண்இமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதியது.
இதில் கார்த்திக்ராஜா, மணிகண்டன் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி சாலையில் விழுந்த 2 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உறவினர்கள் சோகம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்த குழந்தையை பார்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது தச்சு தொழிலாளி விபத்தில் சிக்கி நண்பருடன் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.