விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் கோபியில் 2 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் கோபியில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
கடத்தூர்
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் கோபியில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
விபத்தில் தம்பதி காயம்
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்துள்ள லக்கம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் ராமஜெயம், இவருடைய மனைவி நீலாம்பிகை. இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் கடந்த 2.11.2008 அன்று கோபி-சத்தி ரோட்டில் பள்ளத்து தோட்டம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் ராமஜெயமும், நீலாம்பிகையும் படுகாயமடைந்தனர். இதையடுத்து நஷ்ட ஈடு கேட்டு இருவரும் கோபி 3-வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 1.2.2018 அன்று பாதிக்கப்பட்ட ராமஜெயத்துக்கு ரூ.45 ஆயிரத்து 250-ம், நீலாம்பிகைக்கு ரூ.89 ஆயிரத்து 220-ம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் நீதிபதிகள் தீர்ப்பளித்தபடி நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
2 அரசு பஸ்கள் ஜப்தி
இதைத்தொடர்ந்து ராமஜெயத்துக்கும், நீலாம்பிகைக்கும் நஷ்ட ஈடு வழங்காததால் நீதிபதி கடந்த 6-ந் தேதி அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 2 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோபி பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த 2 பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் கோர்ட்டு வளாகத்துக்கு 2 பஸ்களும் கொண்டு செல்லப்பட்டன.