மதுரையில் 2 மணி நேரம் கொட்டிய மழை - சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
மதுரையில் நேற்று மாலை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் நேற்று மாலை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம்
மதுரையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்தது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நகர் முழுவதும் அனல் காற்று வீசியது. மதுரை நகர மக்கள், உச்சி நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என்று கலெக்டர் கூட அறிவுறுத்தி இருந்தார். அந்தளவுக்கு வெயிலின் கொடுமை மிக கொடூரமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை அடிக்கடி பெய்து கொண்டு இருந்தது. இந்த மழையால் மதுரை மண் சற்று ஈரம் அடைந்தது. மாலை நேரங்களில் சற்று குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.
2 மணி நேரம் பலத்த மழை
இந்த நிலையில் நேற்று திடீரென்று பகலில் இருந்து மதுரையில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்தில் மழை பல இடங்களில் கொட்டி தீர்த்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நல்ல மழை காரணமாக நேற்று இரவில் மதுரையில் குளிர்ச்சியான சீதோஷ்ணம் இருந்தது. சித்திரை திருவிழா தொடங்கியதில் இருந்து மதுரையில் மழை பெய்து வருவதாக பக்தர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இந்த நிைலயில் நேற்று பெய்த மழையால் பெரியார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே குழாய் பதிக்கும் பணிக்காக கிரைம் பிராஞ்ச் அருகே மேயர் முத்து பாலம் ஏறும் வழியில் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் விடப்பட்டு இருந்தது. நேற்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக இந்தப் பள்ளம் வாகன போக்குவரத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மேலும் குழி விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் திடீரென ஏற்பட்ட அந்த குழிக்குள் சிக்கின. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
பஸ் டயர் கழன்றது
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே தீயணைப்பு நிலையத்திற்கு அருகே டவுன் பஸ் ஒன்று முன்பக்க டயர் கழன்று ஓடி கவிழ்ந்தது. இதில் நல்ல வேளை யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் இந்த பாதையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தொடங்கியது. இந்த 2 சம்பவங்களால் பெரியார் பஸ் நிலையத்துக்கு உள்ளே வரவும் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.