2 வீடுகளுக்குள் புகுந்து 34 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் பட்டப்பகலில் 2 வீடுகளுக்குள் புகுந்து 34 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
பழக்கடை உரிமையாளர்
திருச்சி கருமண்டபம் செல்வநகர் விஸ்தரிப்பு அவானி வீதியை சேர்ந்தவர் நாசர் (வயது 58). பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் இவருடைய மனைவி காலை 11 மணி அளவில் வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு, சமையல் அறைக்கு சென்றார். அங்கு சுமார் 15 நிமிடம் சமையல் வேலைகளை பார்த்த அவர், திரும்பி வந்து பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 19 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
பட்டப்பகலில் துணிகரம்
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் கதவை திறந்து வைத்து வேலை பார்த்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், பட்டப்பகலில் துணிகரமாக வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து நாசர் கொடுத்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பூட்டை உடைத்து திருட்டு
இதேபோல் திருச்சி திருவானைக்காவல் திருவளர்ச்சோலை கீழத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி மருதாம்பாள் (79). சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு இவர் சென்னைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் காலை திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மருதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.






