மழையால் 2 வீடுகள் இடிந்தன; 50 ஏக்கர் சோளப்பயிர்கள் நீரில் மூழ்கின


மழையால் 2 வீடுகள் இடிந்தன; 50 ஏக்கர் சோளப்பயிர்கள் நீரில் மூழ்கின
x

மழையால் 2 வீடுகள் இடிந்த நிலையில், 50 ஏக்கர் சோளப்பயிர்கள் நீரில் மூழ்கின.

திருச்சி

துறையூர்:

பலத்த மழை

திருச்சி மாவட்டம் துறையூர், கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, கோவிந்தாபுரம், கிருஷ்ணாபுரம், மருவத்தூர், செல்லிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் கிருஷ்ணாபுரம் காலனியில் வசிக்கும் கண்ணகி மற்றும் கலியன் ஆகியோருடைய வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. முன்னதாக மழையின் காரணமாக அந்த வீடுகளில் யாரும் தங்காமல் வெளியிலே நின்றுள்ளனர்.

இதனால் சுவர் இடிந்து விழுந்தபோது உயிர் சேதம் ஏற்படாமல், அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இருப்பினும் வீட்டில் இருந்த அரிசி மூட்டைகள், காய்கறி, மளிகை பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துறையூர் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சோளப்பயிர்கள் மூழ்கின

மேலும் அப்பகுதியில் 50 ஏக்கருக்கு மேலாக உள்ள விவசாய நிலங்களில் சோளப்பயிர் சாகுபடி செய்துள்ளனர். திடீரென்று நேற்று பெய்த மழையில் விழுந்த நீரிடியாலும், பச்சமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை வெள்ளத்தாலும் 50 ஏக்கருக்கும் மேலாக சோளப்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பரிதவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வழிந்து ஓடும் தண்ணீரானது துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.

பாறைகள் உருண்டு விழுந்தன

மேலும் மழையின் காரணமாக பச்சமலையில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், ஒரு சில இடங்களில் வீடுகளிலும் நீர் புகுந்தது. மேலும் பெருமாள் மலை உச்சியில் உள்ள ராட்சத பாறைகள் மண்சரிவின் காரணமாக உருண்டு விழுந்தன. இதில் ஒரு பாறை சாலையில் விழுந்து கிடந்தது. நேற்று சனிக்கிழமை என்பதால் வாகனங்களில் வந்த பொதுமக்கள், பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள நிலையில், அந்த வழியாக நடைப்பயிற்சி சென்ற பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த பாறையை உருட்டி சாலை ஓரமாக வைத்தனர்.

பாறைகள் விழுவதும், மண் சரிவு ஏற்படுவதும் பெருமாள் மலையில் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. பக்கவாட்டு சுற்றுச்சுவர் கட்டாததாலேயே மண் சரிவால் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்ட உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story