மின்சாரம் தாக்கி 2 பேர் காயம்
திருக்கோவிலூர் அருகே தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 பேர் காயமடைந்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே நாயனூர் கிராமத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் தற்போது ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் தேர் அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தேரின் மேல் பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியது. இதனால் ஏற்பட்ட மின்கசிவால் தேர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் வண்டி மீதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது ஜெனரேட்டர் வண்டியை தள்ளி வந்த அதே ஊரை சேர்ந்த சண்முகம் (வயது 42), விஷ்ணு (21) ஆகிய 2 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.