பாலத்தில் இருந்து விழுந்து 2 பேர் படுகாயம்
பாலத்தில் இருந்து விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கஸ்பா பகுதியை சேர்ந்தவர்கள் ரபிக் அகமது (வயது 30), சாதிக் அகமது (30), யாசின் அகமது (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று வேலூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஏலகிரிக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் மீது சென்றபோது, பின்னால் வந்த லாரி இளைஞர்களை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், நிலை தடுமாறி பைக்கில் சென்ற இளைஞர்கள் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில், மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த யாசின் அகமது மற்றும் சாதிக் அகமது ஆகியோர் மேம்பாலத்தின் மீது இருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர். ரபிக் அகமது மோட்டார்சைக்கிளுடன் தேசிய நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதில், 3 பேருக்கும் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்த 3 பேரையும் வாணியம்பாடி தாலுகா போலீசார் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சாதிக் அகமது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், வாணியம்பாடி-புதூர் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ராமன் (60) என்ற முதியவர் திடீரென மயக்கம் அடைந்து சாலையில் கீழே விழுந்து காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.