ரெயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணத்தில்ரெயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா, ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுகரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார்கள் ரமேஷ்குமார், சலீம், வெங்கடேசன் ஆகியோர் நேற்று மாலை திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் மின்சார ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா கடத்தி வந்தது கேரள மாநிலம் செங்கம் நாடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (43) என்பது தெரியவந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த போது, சந்தோஷ்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று மதியம் சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம் வந்த புறநகர் ரெயிலில் சோதனை செய்தபோது 20 கிலோ கொண்ட 15 பைகளில் சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.