தனித்தனி விபத்தில் 2 பேர் பலி


தனித்தனி விபத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், மயிலத்தில் நடந்த தனித்தனி விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

விழுப்புரம்

சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. இந்த வாகனம் காலை 7 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், திடீரென சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் வாகன டிரைவரின் அருகே அமர்ந்திருந்தவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், 4 பேரும் கோவையில் இருந்து அலுவலக மேஜை, அலமாரிகள் உள்ளிட்ட சாதனங்களை ஏற்றிக்கொண்டு சென்னையில் உள்ள அலுவலகத்தில் டெலிவரி செய்துவிட்டு திரும்பி வரும்போது விபத்து நடந்ததும், இதில் பலியானவர் கோவை செட்டிவீதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 53) என்பதும், காயமடைந்தவர்கள் கோவையை சேர்ந்த மணிகண்டன், அனீஸ்குமார், மற்றொரு மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்றொரு விபத்து

இதேபோல் மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ராஜி (வயது 38). இவர் நேற்று காலை கூட்டேரிப்பட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் கருவாடுகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த இமாம்காசிம் (50) என்பவர் சென்றார்.

திண்டிவனத்தை அடுத்த கன்னிகாபுரம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது அதே திசையில் பின்னால் வந்த கார், அந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த இமாம்காசிம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story