டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
கடலூர் அருகே நடந்த சாலை விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள பாலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 45), சித்தரசூர் காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி(40). கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை ஒரு மொபட்டில் சத்திரம்-நரியங்குப்பம் சாலையில் பாலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சஞ்சீவிராயன் கோவில் அருகே சென்றபோது, முன்னால் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிப்பரை முந்திச் செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் மொபட் டிராக்டர் டிப்பர் மீது எதிர்பாராதவிதமாக உரசியது.
டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலி
இதில் நிலை தடுமாறிய ஏழுமலை, நாராயணசாமி இருவரும் மொபட்டுடன் கீழே விழுந்து டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொபட்டில் சென்ற கூலி தொழிலாளர்கள் 2 பேர் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பாலூர், சித்தரசூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.