ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பேர் பலி
போளூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போளூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையை சேர்ந்தவர்கள்
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன் (வயது 48), சென்னை மதனபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (53). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே முடையூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர்.
இருவரும் நிகழ்ச்சி முடிந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று பிரபாகரன், வெங்கடேசன் மற்றும் முடையூரை சேர்ந்த மற்றொரு உறவினரான சின்ன குழந்தை (60) ஆகியோர் அருகே உள்ள ஏரியில் மீன்பிடிப்பதை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை பிரபாகரன் ஓட்டினார்.
2 பேர் பலி
பின்னர் அங்கிருந்து 3 பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பினர். முடையூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த லாரி திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் சின்னகுழந்தை, வெங்கடேசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சின்னகுழந்தை உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
போளூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வெங்கடேசன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.