நாங்குநேரியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: மீன் வியாபாரி உள்பட 2 பேர் பலி


நாங்குநேரியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்:  மீன் வியாபாரி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2022 4:34 AM IST (Updated: 10 Jun 2022 12:32 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

மீன் வியாபாரி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 53). மீன் வியாபாரியான இவர், தினமும் மீன்களை மொத்த வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து நாங்குநேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று சில்லரைக்கு விற்பனை செய்து வந்தார்.

அதன்படி சுப்பையா நேற்று அதிகாலை நாங்குநேரி நம்பிநகர் பகுதியில் மீன்களை கொள்முதல் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள நான்குவழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பையா சாலையின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டு கிடந்தார்.

2 பேர் பலி

அப்போது நெல்லையில் இருந்து வள்ளியூர் நோக்கி அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் ஏறியதில் சுப்பையா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்தை தொடர்ந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஆம்னி பஸ் டிரைவர் நாகராஜன் (40) பஸ்சை சாலையில் நிறுத்தி விட்டு உதவிக்காக அங்கு சென்றார்.

அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அரசு பஸ், எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆம்னி பஸ்சில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த முத்தையா (71) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையாவும் பரிதாபமாக இறந்தார்.

போக்குவரத்து மாற்றம்

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் தென்னரசு, கண்டக்டர் சுப்புராஜ் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் உயிரிழந்த சுப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும், முத்தையா உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

கார் டிரைவர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பெரியவிளையைச் சேர்ந்த அஸ்வின் (28) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாங்குநேரியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story