2 கோவில்களில் குடமுழுக்கு


2 கோவில்களில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:46 PM GMT)

கொள்ளிடம் பகுதியில் 2 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் 2 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோவில்

கொள்ளிடம் அருகே திருமயிலாடி பிரகனநாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வேறு எங்கும் இல்லாத படி வடக்கு நோக்கி நிஷ்டையில் அமர்ந்து காட்சி தரும் வடிவேல் குமரன் சன்னதி இருந்து வருவது சிறப்பம்சமாகும். சிறப்புமிக்க இந்த கோவிலின் குடமுழுக்கு விழா நடந்தது.

விழாவையொட்டி முதல் நாள் காலை யாக பூஜை பூமி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று கால யாகபூஜைக்கு பிறகு நான்காவது யாக கால பூஜையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், பின்னர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு குடமுழுக்கு நடந்தது.

குடமுழுக்கு

பின்னர் பிரகனநாயகி, வடக்கு நோக்கிய வடிவேல் குமரன், குளக்கரை விநாயகர், நடராஜபெருமான், கஜலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் குடமுழுக்கு மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜன், இளவரசன்,கனகராஜ் மற்றும் உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் சார்பில் செய்திருந்தனர்.

நவநீதகிருஷ்ணன் கோவில்

கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சியில் நவநீதகண்ணபுரம் கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு நடந்தது. கடந்த சனிக்கிழமை முதற்கால யாக சாலை பூஜைகள் தொடங்கி இன்று நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களுக்கு தீபாராதனையும் மகா பூர்ணாகுதியும் காண்பிக்கப்பட்டு கடங்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்தது.

பட்டாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கலசத்தில் இருந்த புனிதநீர் உற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர். இதே போல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீ காளிங்கனர்த்தனம், ஆண்டாள் நாச்சியார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், தும்பிக்கை ஆழ்வார் மற்றும் ராமானுஜர் ஆலயங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் வெளியூர் மற்றும் தாண்டவம்குளம் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story