திருமண மண்டப சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
சோளிங்கரில் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
கட்டிட பணி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இங்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் சோளிங்கர் மேல்வன்னியர் தெருவை சேர்ந்த வேலு (வயது 40), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீமகான் காளிகாபுரம் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் (19) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தனியார் திருமண மண்டபத்திற்கும் பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திற்கும் இடையில் சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இதன் அருகே இருவரும் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து வேலு, விஸ்வநாதன் ஆகியோர் மீது விழுந்தது.
2 தொழிலாளர்கள் பலி
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்துடன் இருந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் வேலு வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. விஸ்வநாதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஸ்வநாதனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலுவிற்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.