2 லட்சம் ஏக்கர் வாடிய பயிர்களுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


2 லட்சம் ஏக்கர் வாடிய பயிர்களுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

குறுவை இழப்பீடு ரூ.5,400 கண்துடைப்பு ஆகும். 2 லட்சம் ஏக்கர் வாடிய பயிர்களுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

ரூ.40 ஆயிரம் இழப்பீடு

ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25 ஆயிரம் வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டபோது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசனும் வலியுறுத்தல்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை போதுமானது அல்ல, இது யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.


Next Story